search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக முதலீட்டாளர் மாநாடு"

    முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. #GIM #MadrasHC
    சென்னை:

    இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் புதன்கிழமை தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.


    இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:-

    முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது?  2015ல் நடந்த முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன?  2015ல் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன?  2015 மற்றும் 2019 ல் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை? இவ்வாறு நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

    மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய மனுவையும் தள்ளுபடி செய்ததுடன், முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #GIM #MadrasHC
    தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படுவதாக கூறிய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், இதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். #GIM2019 #EdappadiPalaniswami #NirmalaSitharaman
    சென்னை:

    தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

    2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது.

    2 நாள் மாநாட்டின் தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல நூற்றாண்டு காலமாகவே நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரம், வெளிநாட்டினரை ஈர்க்கக் கூடியதாக விளங்குகிறது. பல நூற்றாண்டுக்கு முன்பே கடல் தாண்டி வணிகம் நடத்தியவர்கள் தமிழ் மன்னர்கள்.

    வெளிநாடுகளில் உள்ள கட்டிடக்கலை, ஆலயங்கள் கூட தமிழ்நாட்டில் உள்ளன. திறமையான தொழிலாளர்களை கொண்ட முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இங்கு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளேன்.

    உலக அளவில் தொழில் துறையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. நாட்டின் உணவுஉற்பத்தி, பணவீக்கம் சீராக நிர்வகிக்கப்படுகிறது. மின்னணு நிர்வாகம், கால நிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தியா சிறந்து விளங்குகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக பராமரிக்கப்படுகிறது.

    60 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக ஜி.எஸ்.டி. வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை, ஒரே விலை என்ற அளவில் உள்ளது.

    ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் இந்தியாவில் 2 இடங்களில் அமைக்கப்படுகிறது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைய இருக்கிறது. ராணுவ தளவாடங்களை பெறுவதில் இந்தியா மிகப்பெரிய நுகர்வோராக உள்ளது. தமிழகத்தில் சென்னை, ஓசூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

    யார் முதலீடு செய்ய முன்வந்தாலும் அவர்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். தமிழகம் தொழில்தொடங்க உகந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழக மாணவர்கள் தொழில் தொடர்பான பயன்பாட்டிற்காக ஜப்பானிய மொழி, கொரியா மொழி உள்ளிட்டவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முதலீட்டாளர்களை வரவேற்று பேசினார்.

    இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

    இதேபோல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான தொழில் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதற்காக 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரும் நிறுவனங்களுக்கு 140 அரங்குகளும், சிறு குறு நிறுவனங்களுக்கு 110 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    மதியம் 2 மணிக்கு முதலீட்டு கருத்தரங்கங்களும், வெளிநாட்டு கருத்தரங்கங்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது. ஒவ்வொரு கருத்தரங்கத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டின் நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதேபோல், ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கமும் நடக்க இருக்கிறது. மாலை 3 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இதில் முக்கிய நிகழ்ச்சியாக தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன.

    2 நாள் மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.98 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் வரை சாலைகள் புதுப்பிக்கப்பட்டன.

    சென்னை வர்த்தக மையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை முழுவதும் ஆங்காங்கே, மாநாடு தொடர்பான விளம்பரங்கள் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன.

    விமானம், உணவு, வாகனம், பெட்ரோல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர் உள்ளிட்ட 11 துறைகள் மீது, தொழில் துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி உள்ளனர்.

    இந்த துறைகளில், வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கவும், முயற்சி எடுத்தனர். அதற்கு, பலன் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இந்த மாநாட்டில், அதிக முதலீட்டிற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

    மேலும், ஒரு முறை பயன்படுத்தியதும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள் தயாரிக்க ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த துறையில் மட்டும், ரூ.35 ஆயிரம் கோடி முதலீடுகள் வரலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    2 நாள் மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கொரியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்கிறார்கள். #GIM2019 #EdappadiPalaniswami #NirmalaSitharaman
    தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #GIM2019 #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதில் 98 திட்டங்கள் ஒப்பந்தம் போடப்பட்டன. 3 முதல் 7 வருடங்கள் தொழில் நிறுவனங்கள் வருகைக்காக நிர்ணயிக்கப்பட்டன, அதன் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்தன. முதல் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள், உற்பத்தியை தொடங்குவதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம். சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. உள்கட்டமைப்பிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, தமிழகத்தில் 48% பேர் உயர்கல்வி பயின்றுள்ளனர்.


    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் உலகத் தரத்திலான போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்தி உள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகிய துறைகளில் சமூக நல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #GIM2019 #EdappadiPalaniswami
    உலக முதலீட்டாளர் மாநாட்டில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, தொழில்துறைக்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் விளங்குவதாக தெரிவித்தார். #GIM2019 #NirmalaSitharaman
    சென்னை:

    சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    தொழில் செய்ய உகந்த மாநிலமாகவும், திறமையான தொழிலாளர்களைக் கொண்ட முன்னணி மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது. தொழில்துறைக்கு ஏற்ற வகையில் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வணிகம் செய்தவர்கள் தமிழக மன்னர்கள். கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இதற்கான கல்வெட்டுகள் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள கட்டடக்கலை மற்றும் ஆலயங்கள் கூட தமிழகத்தில் இருக்கின்றன. தமிழகத்தில் ராணுவ தொழிற்பாதையை மத்திய அரசு அமைக்க உள்ளது.

    இப்போது உலக அளவில் வளர்ச்சியிலும் தொழில் துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது. உலக அளவில் பொருளாதாரத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. மின்னணு நிர்வாகம், காலநிலை மாற்றம் ஆகியவற்றிலும் இந்தியா சிறந்து விளங்குகிறது. சூரிய மின்உற்பத்தி உள்ளிட்ட தூய எரிபொருள் துறையிலும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.


    நாட்டின் உணவு பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6 சதவீதத்துக்கு மேல் பராமரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் செய்த மிகப்பெரிய சீர்திருத்தம் ஜிஎஸ்டி. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக, ஜிஎஸ்டி வெற்றிகரமாக  அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை, ஒரே விலையாக மாற்றப்பட்டிருக்கிறது. தொழில்துறையில் தமிழகம் முன்னேறுவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். #GIM2019 #NirmalaSitharaman
    சென்னையில் இன்று இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். #EdappadiPalaniswami #GlobalInvestorsMeet2019 #GIM2019
    சென்னை:

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந் தேதிகளில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.



    சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, ‘தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டு பேசுகிறார். மதியம் 2 மணி முதல் பல்வேறு தலைப்புகளின் கீழ் துறை சார்ந்த கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

    2-வது நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கருத்தரங்கங்களுடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது. மதியம் 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைமை விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசுகிறார். சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

    அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. சுமார் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #EdappadiPalaniswami #GlobalInvestorsMeet2019 #GIM2019
    சென்னை உயர்நீதிமன்றத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #GIM2019 #HighCourt #GIMCase
    சென்னை:

    சென்னையில் வரும் 23, 24-ந் தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஏமாற்றும் நிறுவனங்களிடம் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மாநாட்டின்போது ஒப்பந்தம் செய்த சில நிறுவனங்கள் முதலீடு செய்யாததால் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தனியார் நிறுவனங்களின் பின்னணி குறித்து ஆராய விதிகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


    இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.2.55 லட்சம் கோடிக்கு முதலீட்டை ஈர்க்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில், நிறுவனங்களுக்கு எப்படி நிலம் ஒதுக்கப்படும்? என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார். #GIM2019 #HighCourt #GIMCase
    அடுத்த ஆண்டு ஜனவரி 23, 24-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப் படும் என்று சட்டசபையில் அமைச்சர் எம்.சி. சம்பத் அறிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் எம்.சி. சம்பத் பதிலளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:-

    சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் வானூர்திகள் மற்றும் பாதுகாப்புத் துறை தளவாடங்கள் உற்பத்திப் பூங்காவிற்கு கடந்த 25.10.2017 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    இந்த வானூர்தி பூங்காவில், முதற்கட்டமாக 180 கோடி ரூபாய் முதலீட்டில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் வானூர்தி, உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையம் ஒன்று நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    தொழில்துறை மூலமாக தொடர்ந்து முதலீட்டாளர்களை தொடர்பு கொண்டு பேசியதன் மூலமாக சமீபத்தில் தமிழகத்தில் முதலீடு செய்ய பல திட்டங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன.

    அதன்படி, ரூ.2,500 கோடி முதலீட்டில் மோட்டார் வாகன உற்பத்தி திட்டம்; ரூ.4 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் டயர் உற்பத்தி ஆலை; ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் கண்ணாடி மற்றும் கண்ணாடி இழை உற்பத்தி; ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உட்பட இரண்டு சக்கர வாகன உற்பத்தி ஆலைகள்; ரூ.28 ஆயிரத்து 800 கோடி முதலீட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்புத் திட்டங்கள்; ரூ.500 கோடி முதலீட்டில் டயர் வேதிப் பொருட்கள் உற்பத்தி திட்டம்; ரூ.1,800 கோடி முதலீட்டில் நான்கு மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டங்கள்; ரூ.350 கோடி முதலீட்டில் ஜவுளி திட்டம்; ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் இதர பிற திட்டங்கள் என இந்தத் திட்டங்களின் மூலமாக ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது.

    விடா முயற்சியின் ஓர் அம்சமாக 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய ஒரு வழிகாட்டுதல் குழு மற்றும் தலைமைச் செயலாளர் தலைமையின் கீழ் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

    உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் சில நாடுகளை பங்குதாரர் நாடுகளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    வல்லம் வடகால் தொழில் பூங்காவில் ஒரு வானூர்திப் பூங்கா அமையவுள்ளது. இது ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதோடு, சுமார் 35 ஆயிரம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

    தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் நடப்பாண்டில் 404 ஏக்கர் நிலத்தை, 133 தொழில் அலகுகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் ரூ.1,785 கோடி முதலீடு செய்யப்பட்டு 27 ஆயிரத்து 805 நபர்கள் வேலை வாய்ப்பு பெற உள்ளனர்.

    தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் 3-வது இடத்தில் தமிழகம் தொடர்ந்து நீடிக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறையாது. ஏனென்றால், இங்கு தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலை, தொழில் கொள்கை, மனிதவள ஆற்றல், திறமையான தொழிலாளிகள், மிகச் சிறந்த பொறியாளர்கள் என எத்தனையோ சாதகமான அம்சங்கள் உள்ளன.

    உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை தமிழகம் பெறும்.

    இவ்வாறு அவர் பதிலளித்துப் பேசினார்.

    பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

    கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை கண்காணிப்பு அமைப்பு மென்பொருள் நடைமுறைப்படுத்தப்படும்.

    சர்க்கரைத் துறை, தமிழ்நாடு சர்க்கரைக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த சர்க்கரை வளாகம் அமைக்கப்படும்.

    கள்ளக்குறிச்சி 1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புத் திசு வளர்ப்பு ஆய்வகம் அமைக்கப்படும்.

    இவ்வாறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 
    ×